சென்னை: விஸ்வரூபம் படத்தை தடை செய்தது அரசியல் பிரச்சினை அல்ல. அது
முற்றிலும் சட்டம் ஒழுங்கு சம்பந்தப்பட்ட பிரச்சினையாகும் என்று முதல்வர்
ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
விஸ்வரூபம் தொடர்பாக உச்சநீதிமன்றத்திற்கு இப்போதைக்குப் போகப் போவதில்லை
என்று கமல்ஹாசன் அறிவித்துள்ள நிலையில், முதல்வர் இதுதொடர்பாக ஆலோசனையில்
இறங்கினார்.
தலைமைச் செயலகத்தில் நடந்த இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாநில டிஜிபி
ராமானுஜம், அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணன், உள்துறைச் செயலாளர்
உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார் ஜெயலலிதா. ஆங்கிலத்தில் அவர்
கொடுத்த பேட்டியின் விவரம்...
கடந்த சில நாட்களாக விஸ்வரூபம் திரைப்படம் தொடர்பாக டிவிகள்,
பத்திரிக்கைகள், இணையதளங்களில் காட்டுக்கத்தலாக இருக்கிறது.என்னைப்
பறறியும், எனது அரசைப் பற்றியும் இரக்கமே இல்லாமல் குற்றச்சாட்டுக்கள்,
புகார்களை சுமத்தி வருகின்றனர். எனவே இதுகுறித்து விளக்கம் அளிக்க
வேண்டியது அவசியம் என்பதை உணர்ந்தேன். இப்பட விவகாரம் தொடர்பான அனைத்து
தவறான கருத்துக்களையும் மறுக்க வேண்டியது அவசியம் என்பதற்காகவே இந்த
செய்தியாளர் சந்திப்பு.
இந்தப் படத்தை அரசு தடை செய்திருக்கக் கூடாது என்பது முதல் குற்றச்சாட்டு,
தியேட்டர்களுக்குப் பாதுகாப்பு கொடுத்திருக்க வேண்டும் என்பதும் ஒரு
புகார். பலருக்கு சட்டம் ஒழுங்கை அரசு எப்படி பாதுகாக்கிறது என்பதே
புரிவதில்லை. அரசின் நிர்வாக செயல்பாடுகள் குறித்து எதுவும் தெரிவதில்லை.
இதுகுறித்து கருத்து தெரிவிப்போர் அரசின் சிரமங்கள், நிர்வாகப்
பிரச்சினைகள் குறித்து புரிந்து கொள்வதே இல்லை.
ஒரு முதல்வர் என்ற வகையில் மாநிலத்தின் சட்டம் ஒழுங்கைப் பாதுகாப்பதுதான்
எனது முதல் முன்னுரிமையாகும். சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டியது எனது
கடமையாகும். மக்கள் அமைதியாக, சுமூகமான முறையில், இணக்கமான முறையில் தினசரி
வாழ்க்கையை நடத்த வேண்டியது அவசியமாகும். அதை உறுதி செய்ய வேண்டியது எனது
கடமையாகும்.
விஸ்வரூபம் படத்தை 525 தியேட்டர்களில் வெளியிடுவதாக கூறியிருந்தனர். ஆனால்
இந்தப் படத்தைத் தடை செய்ய வேண்டும் என்று 24 முஸ்லீம் அமைப்புகள்,
தமிழ்நாடு தெளஹீத் ஜமாத் ஆகியவை சார்பில் அரசிடம் கோரிக்கை மனு
கொடுக்கப்பட்டது. உள்துறைச் செயலாளரிடம்இதைக் கொடுத்னர். அவர்களின்
கோரிக்கைளை வலியுறுத்தி போராட்டங்களையும் அறிவித்தனர். இதனால் சட்டம்
ஒழுங்கு சீர்குலையும் நிலை உருவானது.
சட்டம் ஒழுங்குசீர்குலைந்து, வன்முறை மூண்டால் அதை காவல்துறையினரால்
சமாளிக்க முடியுமா என்பதை அரசு பரிசீலித்தது. தமிழக காவல்துறையின் மொத்த
காவலர் பணியிடம் 1,13,780 பேராகும். இதில் காலியிடம் 21,911 ஆகும். எனவே
இருப்பது 91,807 பேர்தான். இதில் கோர்ட் பணி, ரோந்து உள்ளிட்ட பல்வேறு
பணிகளுக்குப் போன காவலர்களைத் தவிர்த்துப் பார்த்தால், மீதமிருப்பது வெறும்
9226 பேர்தான்.
ஆனால் விஸ்வரூபம் படம் திரையிடப்படும் 525 தியேட்டர்களுக்கும் பாதுகாப்பு
அளிக்க வேண்டும் என்றால் குறைந்தது 56,440 போலீஸார் தேவைப்படுவார்கள்.
ஆனால் அது இயலாத காரியம். சில தியேட்டர்கள் என்றால் பரவாயில்லை, 525
தியேட்டர்களுக்குப் பாதுகாப்பு தருவது என்பது எப்படி முடியும். எனது
அரசுக்கும், முதல்வராக எனக்கும், ஒருதிரைப்படத்தை விட மக்களின் சட்டம்
ஒழுங்கு நிலைதான் முக்கியம் என்பதால் படத்தைத் தடை செய்யும் முடிவை அரசு
எடுத்தது என்றார் ஜெயலலிதா.http://tamil.oneindia.in