இன்றைய சூழ்நிலையில் ஒருமைப்பாட்டை வளர்க்கும் தலைவர்தான் நாட்டுக்குத் தேவை; பிரிவினையைத் தூண்டுபவர் அல்ல என, பீகார் முதல்வர் நிதீஷ்குமார் தெரிவித்தார்.
பாஜக வையும் நரேந்திர மோடியை கடுமையாக சாடி செய்தியாளர்களிடம் நிதீஷ்குமார் தெரிவித்ததாவது:
என்னை சந்தர்ப்பவாதி என குற்றம்சாட்ட பாஜகவுக்கு தகுதியில்லை.
ராமர் கோயில் விவகாரத்தை எழுப்பக்கூடாது; 370-ஆவது சட்டப்பிரிவை அமல்படுத்தக் கூடாது; அனைவருக்கும் பொது சிவில் சட்டத்தைக் கொண்டுவர முயற்சிக்கக் கூடாது போன்றவற்றை உறுதிப்படுத்திய பிறகே பாஜகவுடன் ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி அமைத்தது.
அதே போல் கூட்டணிக் கட்சியினரைக் கலந்தாலோசித்தே தேசிய அளவில் முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினோம்.
ஆனால் மோடியை தேசிய அளவில் முன்னிறுத்தி கூட்டணிக் கட்சிகளின் அதிருப்திக்கு பாஜக ஆளாகியுள்ளது.
வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் 24 கட்சிகள் இடம்பெற்றிருந்தன. ஆனால் இப்போது அந்தக் கூட்டணியில் எத்தனை கட்சிகள் இடம்பெற்றுள்ளன?
2004-ஆம் ஆண்டு பிரமோத் மகாஜனும் 2009-ஆம் ஆண்டு அருண் ஜேட்லியும் தேர்தல் பிரசாரக் குழுத் தலைவர்களாக இருந்தனர்.
அப்போதெல்லாம் ஏற்படாத பிரச்னை மோடியை தேர்தல் பிரசாரக் குழுத் தலைவராக நியமிக்கும்போது ஏன் ஏற்படுகிறது என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
272 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்தால்தான் மத்தியில் ஆட்சியமைக்க முடியும்.
பாஜக தனித்தோ கூட்டணி அமைத்தோ போட்டியிட்டாலும் பெரும்பான்மை பலத்தை பெற முடியாது என்றார் நிதீஷ்குமார்.