பணத்தால் எனக்கு பயன் இல்லை -பில்கேட்ஸ்


பணம் என்பது மனிதர்களின் தொழிலாளியாகத்தான் இருக்கவேண்டுமே தவிர என்றைக்குமே எஜமானனாக மாறக்கூடாது என்பார்கள். இதை யார் புரிந்து வைத்திருக்கிறார்களோ இல்லையோ உலக கோடீஸ்வரர் பில்கேட்ஸ் நன்றாக தெரிந்து வைத்திருக்கிறார். அதான் கோடி கோடியாய் பணம் இருந்தாலும் அதனால் என்ன பிரயோஜனம் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மைக்ரோ சாப்ட் துணை நிறுவனரான பில்கேட்ஸ் லண்டனில் இருந்து வெளியாகும் பிரபல நாளிதழுக்கு சமீபத்தில் பேட்டியளித்தார். அப்போது அவர் சுமார் 65 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு தனக்கு சொத்து உள்ளது. ஆனாலும் அவ்வளவு பணத்தால் தனக்கு எந்த பிரயோஜமும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

உணவு, உடை போன்ற அடிப்படை தேவைகளை பொருத்த வரையில் நான் தன்னிறைவுடன் வாழ்கிறேன். இந்த அளவுகோலுக்கு மேல் என்னிடம் பணம் இருந்து பயன் ஏதுமில்லை. போலியோவை ஒழித்தது போல், பல்வேறு நோய்களால் வாடும் ஏழை குழந்தைகளுக்கு நோய் தடுப்பூசி மற்றும் சுகாதார பணிகளில் சேவை செய்யும் பெண்களுக்காக என் செல்வத்தை செலவழிக்க முடிவு செய்துள்ளேன்.

1990-ம் ஆண்டில் உலகமெங்கும் 5 வயதை தாண்டாத 1 கோடியே 20 லட்சம் குழந்தைகள் நோயால் பலியாகினர். அந்த எண்ணிக்கை தற்போது 70 லட்சமாக குறைந்துள்ளது. இதேபோல் குழந்தைகளை தாக்கும் கொடிய நோய்களை ஒழிப்பதற்காக அறக்கட்டளையின் மூலம் என் பணத்தை நல்ல முறையில் செலவு செய்ய விரும்புகிறேன் என்று இவர் கூறியுள்ளார்.

பில் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை சார்பில், உலக நாடுகளில் போலியோவை ஒழிக்க கடந்த 6 ஆண்டுகளில் 1.8 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவிடப்பட்டுள்ளது. அறக்கட்டளைகளுக்கு நன்கொடையாக 28 பில்லியன் அமெரிக்க டாலர்களும், உலக சுகாதார மேம்பாட்டுக்காக 8 பில்லியன் அமெரிக்க டாலர்களும் பில் கேட்ஸ் வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.Sangairidhvan

Back to Home Back to Top tntjmvl