18 Jan 2013
புதுடெல்லி:கர்நாடகா பா.ஜ.க அரசு
பாடப் புத்தகங்களை காவிமயப்படுத்துவதாக சுட்டிக்காட்டி கல்வியை காவி
மயமாக்குவதற்கு எதிரான கமிட்டி என்.சி.இ.ஆர்.டிக்கும் மத்திய அரசுக்கும்
மனு அளித்துள்ளது. பாடப் புத்தகங்களின் தரம் குறைவாக இருப்பதாகவும்,
பல்வேறு சமுதாயங்களைக் குறித்து தவறாக சித்தரிப்பததாகவும் கமிட்டி மத்திய
அரசுக்கு தெரிவித்துள்ளது.

கர்நாடகா டெக்ஸ்ட்புக் சொசைட்டி ஐந்தாம்
வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்புகளுக்காக வெளியிட்ட புத்தகங்களில்
பெரும்பாலானவை 2005-ஆம் ஆண்டு தேசிய கல்வித் திட்டத்திற்கு(curriculum)
எதிரானவையாகும் என்று கமிட்டி நிர்வாகிகள் தெரிவித்தனர்.
அவர்கள் மத்திய அரசுக்கு அளித்துள்ள மனுவில் கூறியிருப்பது:
பிஞ்சு உள்ளங்களில் வகுப்புவாத நஞ்சை
விதைக்கும், மதசார்பற்ற விழுமியங்களை தகர்க்கும், ஹிந்துதேசம் குறித்து
பிரச்சாரம் அடங்கிய கருத்துக்களே புத்தகங்களில் இடம்பெற்றுள்ளன.
இவ்விவகாரத்தில் என்.சி.இ.ஆர்.டியும் கர்நாடகா அரசுக்கு கடிதம்
எழுதியுள்ளது. கர்நாடகா டி.சி.ஆர்.டி வெளியிட்ட புத்தகங்களை உயர் கல்வி
நிபுணர்களை கொண்டு பரிசோதிக்காமல் இருப்பதன் காரணத்தை கர்நாடகா அரசு
விளக்கவேண்டும்.
பாடப் புத்தகங்கள் தலித்துகள்,
சிறுபான்மையினர், பெண்கள், பழங்குடியினர் ஆகியோரை தரக்குறைவாக
சித்தரிக்கிறது. கலாச்சார ரீதியாக பாரபட்சம் காட்டக்கூடாது என்ற 2005-ஆம்
ஆண்டு தேசிய கல்வித் திட்டத்தின் கொள்கைக்கு எதிராக பாடப்புத்தகங்கள்
வெளியிடப்பட்டுள்ளன.வரலாற்றுப் புத்தகங்கள் ஹிந்துத்துவா வாதிகளின்
சிந்தனையின் அடிப்படையில் உள்ளது. முஸ்லிம் மன்னர்கள் ஹிந்துக்களை
வேட்டையாடியதாகவும், ஆனால், ஹிந்து மன்னர்கள் முஸ்லிம் மன்னர்களுடன்
மட்டுமே போர் புரிந்ததாகவும் ஐந்தாம் வகுப்பு வரலாற்று பாடத்தில்
இடம்பெற்றுள்ளது.
புண்ணியகோடி என்ற அத்தியாயத்தில் பசு
மாமிசம் சாப்பிடுவதுக் குறித்து விமர்சனம் இடம்பெற்றுள்ளது. ஆனால், அந்த
அத்தியாயத்தின் கன்னட மூலத்தில் அவ்வாறான விமர்சனம் இடம்பெறவில்லை.
கர்நாடகாவில் உள்ள பாடப் புத்தகங்களை என்.சி.இ.ஆர்.டி விரிவாக
ஆராயவேண்டும். எதிர்காலத்தில் கர்நாடகா டெக்ஸ்ட் புக் சொசைட்டி பாடப்
புத்தகங்களை தயாரிக்கும்பொழுது இத்துறையில் நிபுணத்துவம் பெற்ற கேரளாவுடன்
தொடர்புகொள்ள வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. தகவல் : தூது ஆன்லைன்