

என் பள்ளி தமிழ் ஆசிரியரைப் பார்க்க பெரம்பூர் சென்றேன். அந்த பேருந்து நிலையத்தில், காத்திருந்த போது ஒரு பேருந்து மட்டும் இருபுறமும் வாழைமரம் கட்டி, பூக்களெல்லாம் தொங்கவிட்டு, எல்லா இடங்களிலும் பட்டை இட்டுக்கொண்டு வந்து நின்றது. ஆயுத பூஜைக்காக செய்த அலங்காரத்துடன் ஓர் அரசுப் பேருந்தினை கண்டது, ஆச்சிரியமாக இருந்தது. அதுவும் சென்னை போன்ற மாநகரில் இத்தனை படித்தவர்களின் மத்தியில் கிராமத்து மாட்டுவண்டி போல அலங்காரத்துடன் வலம் வரும் பேருந்தை எப்படி அனுமதித்தார்கள் என தெரியவில்லை. மற்ற பேருந்துகள் சிலவற்றிலும் கூட திருநீர் பட்டை அடிக்கப்பட்டிருந்தது.
ஆயுத பூஜைக்காக வாகணங்களை தூய்மை செய்து, அலங்காரப்படுத்துவது இந்துகளின் செயல். அதை எப்படி அரசே ஏற்றுநடத்தும் பேருந்து கழகத்தில் கொண்டாடினார்கள்?. பேருந்து கழகமென்ன காவல் நிலையங்களிலும் பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன. சுகந்திர தின விழாவிற்கு ஒருநாள் விடுமுறை விட்டும், அதற்கு முதல்நாளே கொடியேற்றி விழா கொண்டாடிவிட்டு செல்லும் அரசு அலுவலங்களிலும், அரசு பள்ளிகளிலும் சரஸ்வதி பூஜையும், ஆயுத பூஜையும் பெருங் கொண்டாட்டத்துடன் கொண்டாடப்படுகிறது என்பது வியப்புதானே.
அரசு அலுவலகங்களில் கடவுளின் படங்கள் வைப்பதற்கு தடை செய்யப்பட்டிருக்கிறதாம். மேலும் அரசானை கூட பிரப்பிக்கப்பட்டிருக்கிறது என்கிறார்கள். கடவுள்களின் படங்கள் இல்லாத அரசு அலுவங்களை இதுவரை நான் பார்த்தில்லை. காலாண்டரிலாவது கணபதி காட்சியளிப்பார். “ஏதோ அன்று மட்டுமாவது பேருந்தை கழுவுகின்றார்கள். அதைப் போய் ஏன் தடுப்பானேன்” என்கின்றீர்களா?. அதுவும் சரிதான். மாற்று மதத்தினர் இதனை பொருட்படுத்தாத வரை இதுபோன்ற நிகழ்வுகள் தொடராத்தான் செய்யும். சொல்வது நம் வேலை. பிரட்சனைகள் வரும் முன்பு களையவேண்டியது அரசின் வேலை