2 ஆயிரம் ரூபாய் இருந்தால், டெல்லியில் ஒரு மதக் கலவரத்தை ஏற்படுத்தி விடலாம் என்ற நிலை இப்போது உள்ளது-கட்ஜு


1857-ம் ஆண்டு இந்தியாவில் ஏற்பட்ட கலகத்திற்கு பிறகு, இந்த நாட்டை ஆள இந்து - முஸ்லிம் இடையே மோதல்களை ஏற்படுத்த வேண்டும் என்று திட்டமிட்டு வெள்ளையர்கள் செலுத்திய வகுப்புவாத விஷத்திற்கு, இன்று நாம் பலியாகி விட்டோம். இந்துக்களின் மொழி இந்தி என்றும், முஸ்லிம்களின் மொழி உருது என்றும், வெள்ளையர்கள்தான் பிரித்து வைத்தனர்.

நமது முன்னோர்கள் உருது மொழியையும் சேர்த்தே படித்தார்கள். ஆனால், நீங்கள் முட்டாள்களாக இருப்பதால் சுலபமாக ஏமாற்றி விட முடிகின்றது. 90 சதவீதம் இந்தியர்கள் முட்டாள்களாக இருக்கிறார்கள். அவர்களை மதத்தின் பெயரால், சில தீயசக்திகள் தவறான பாதைக்கு திருப்பி விடுகின்றன.

1857-க்குப் பிறகு 150 ஆண்டுகள் உருண்டோடி விட்டன. நாம் இன்னும் முன்நோக்கி செல்லாமல், பின் நோக்கியே போய்க் கொண்டிருக்கிறோம். உங்கள் தலையில் மூளையில்லாததால், உங்கள் மீது ஏறி சவாரி செய்வது தீய சக்திகளுக்கு வசதியாக இருக்கின்றது. கையில் 2 ஆயிரம் ரூபாய் இருந்தால், டெல்லியில் ஒரு மதக் கலவரத்தை ஏற்படுத்தி விடலாம் என்ற நிலை இப்போது உள்ளது.

யாராவது ஒருவர், குறும்புத்தனமாக வழிபாட்டு தலம் அவமதிக்கப்பட்டுள்ளது என்று புரளி கிளப்பி விட்டால் போதும். மக்கள் ஒருவரோடு ஒருவர் அடிதடி சண்டையில் இறங்கி விடுகின்றனர். இதன் பின்னணியில் உள்ள தீய சக்தி என்ன? என்பது பற்றி சிந்திக்கக் கூட நிதானமற்ற நிலையில், நம் நாட்டில் உள்ள 90 சதவீதம் பேர் முட்டாள்களாக உள்ளனர்.

இந்த கசப்பான கருத்தை நான் கூறுவதற்கு காரணம், நான் உங்களை நேசிக்கிறேன். எந்த சம்பவத்திலும், பின்னணியில் உள்ள இயக்கும் சக்தி எது? என்பதை நீங்கள் புரிந்துக் கொள்ள வேண்டும். இன்னும் முட்டாள்களாகவே இருக்கக் கூடாது என்பதற்காக தான், இத்தகைய முரட்டுத்தனமான கருத்தை நான் கூற நேர்ந்துள்ளது.-கட்ஜு

Back to Home Back to Top tntjmvl